கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செங்கலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்துத் தலைவா் திவ்யா விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு, அதை நிறுத்திவைத்துள்ளாா். இதற்கிடையே அவர் பத்தனம்திட்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவருக்கு வழியனுப்பு விழா, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது அழையா விருந்தாளியாக அங்குச் சென்ற திவ்யா, “செங்கலையில் பெட்ரோல் பம்பிற்கு நவீன் பாபு, அனுமதி வழங்காமல் பல மாதம் காலதாமதம் செய்தார், அவர் மாற்றப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என அவர்மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இது, அவருக்கு வேதனையைத் தந்துள்ளது.
இந்நிலையில் நவீன் பாபு தாம் தங்கியிருந்த கண்ணூர் அரசு இல்லத்தில் தற்கொலை செய்துள்ளார். நவீன் பாபுவை தற்கொலை செய்யத் தூண்டியதாக திவ்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நவீன் பாபு மரணத்திற்கு நீதி கேட்டு சிபிஎம் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. திவ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி இருந்தன.
இதையும் படிக்க: தொடரும் போர் | ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த ஷேக் நைம் காசிம்?
இதையடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பதவியிலிருந்து திவ்யாவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நீக்கியது. அதைத் தொடா்ந்து, முன்ஜாமீன் கோரி மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திவ்யா மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, நேற்று தலசேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.டி.நிசாா் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கில், அரசு உயா் அதிகாரியை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு திவ்யா செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. விதிவிலக்கான சந்தா்ப்பங்களில் மட்டுமே முன்ஜாமீன் சலுகை அளிக்கப்பட வேண்டும்” என்று கூறியதுடன், மேலும் உயா்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி திவ்யாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் கண்ணூா் நகர போலீஸாா் திவ்யாவை கைது செய்தனா்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு பதிலளித்த நவீன் பாபுவின் மனைனி மஞ்சுஷா, “எங்கள் வாழ்க்கையை அழித்த நபரை கைது செய்ய வேண்டும். நீதியை உறுதிப்படுத்த நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். கணவரின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதில் அலட்சியம் இருந்ததா என்பதை விசாரிக்க விசாரணை தேவை. ஊழியர்கள் வழியனுப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள திவ்யாவை மாவட்ட ஆட்சியர் அனுமதித்திருக்கக் கூடாது. மேலும் அன்று, உள்ளூர் சேனல் மூலம் திவ்யாவின் பேச்சை பதிவு செய்ததும் பொருத்தமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.