போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் pt web
இந்தியா

பெங்களூரு: கன்னட மொழியில் இல்லாத பெயர்ப்பலகைகளை அடித்து உடைத்த ’கன்னட ரக்ஷன வேதிகே’ அமைப்பினர்!

கர்நாடகத்தில் உள்ள பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பேரணியாக சென்ற கன்னட அமைப்பினர் மாற்றப்படாத பெயர்ப்பலகளை சிதைத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

கடந்த சில தினங்கள் முன் கர்நாடக மாநிலத்தில், கன்னட மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கர்நாடக ரக்ஷன வேதிகே எனப்படும் கர்நாடக பாதுகாப்பு மன்றம் மல்லேஸ்வரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குடிமை அமைப்பின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் , “BBMP எனப்படும் Bruhat Bengaluru Mahanagara Palike (கிரேட்டர் பெங்களூர் பெருநகர மாநகராட்சி) எல்லைக்குள் இருக்கும் கடைகள், உணவகங்கள், பிற வணிக நிறுவனங்கள் கன்னட பெயர்ப் பலகை விதியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கான காலக்கெடுவாக பிப்ரவரி 28, 2024 நிர்ணயிக்கப்படும். மால்களில் உள்ள கடைகளிலும் பெயர்ப்பலைகளை கன்னடத்தில் மாற்ற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை சட்ட எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இரு தினங்கள் முன், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் ஆதரவாளர்கள் இது குறித்தான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சார வாகனத்தில் வந்த பெண் பேசுகையில், “இது கர்நாடக மாநிலம். கன்னடர்கள் மாநிலத்திற்கான பெருமை. உங்கள் மாநிலத்திற்கு நீங்கள் சென்று உங்கள் பெருமைகளைக் காட்டுங்கள். மார்வாரிகளே, அடுத்த முறை நீங்கள் கன்னடம் தெரியாது என சொன்னால் நீங்கள் தான் இலக்காவீர்கள்” என தெரிவித்திருந்தார். இது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று கன்னட மொழி ஆதரவாளர்கள் இன்று பெங்களூர் பகுதியில் உள்ள எம்ஜி சாலை, பிரிகேட் சாலை, லாவெல்லே சாலை, யுபி சிட்டி, சாமராஜப்பேட்டை, சிக்பெட், கெம்பே கவுடா சாலை, காந்தி நகர், செயின்ட் மார்க்ஸ் சாலை, கன்னிங்காம் சாலை, ரெசிடென்சி போன்ற பகுதிகளில் பேரணி நடத்தினர். அப்போது கடைகளில் கன்னடத்தில் இல்லாத பெயர்ப்பலைகளை சிதைத்தனர். மேலும் சிலர் பெயர்ப்பலைகளில் இருந்த ஆங்கில எழுத்துக்களை கருப்பு நிற மை கொண்டு அழித்தனர். அவர்கள் 60% கன்னட மொழி என்ற நகரின் குடிமை அமைப்பு கொடுத்த பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பேரணியாக சென்றவர்கள் வலியுறுத்தினர்.

இதன்காரணமாக அங்கு கலவரம் ஏற்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் சிலரை கைது செய்த பின்பு நிலைமை கட்டுக்குள் வந்தது.

கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த நாராயண கவுடா செய்தியாளர்களை சந்திக்கும் போது, “விதியின் படி, ஒவ்வொரு பெயர் பலகையிலும் 60% பெயர்கள் கன்னடத்தில் இருக்க வேண்டும். நாங்கள் உங்கள் தொழிலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், நீங்கள் கர்நாடகத்தில் வியாபாரம் செய்கின்றீர்கள் என்றால் எங்கள் மொழியை மதிக்க வேண்டும். கன்னடத்தை புறக்கணித்தால் அல்லது கன்னட எழுத்துக்களை சிறியதாக வைத்தால். , நாங்கள் உங்களை இங்கு செயல்பட விடமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு அக்டோபரில் முதலமைச்சர் சித்தராமையா, “இந்த மாநிலத்தில் வாழும் அனைவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அங்கு மொழி மீண்டும் பேசு பொருளாகியுள்ளது என பரவலான ஆங்கில நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.