கர்நாடகாவில் கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி நாடு முழுவதும் ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவிலுள்ள அனைத்து அலுவல் மொழிகளும் சமமானது. கர்நாடகாவை பொறுத்தவரை கன்னடம்தான் முக்கிய மொழி. கன்னடத்தின் முக்கியத்துவத்தை எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். நாங்கள் எப்போது கன்னட மொழி மற்றும் கலாச்சரத்தை பரப்ப முக்கியத்துவம் அளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, “நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழி இந்தி என்று சொன்னால் அது மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது கர்நாடக முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.