“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தேர்தல் என்றாலே திருவிழா தான்... இதற்கு கர்நாடகா மட்டும் விதிவிலக்கா என்ன? கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு மினி திருவிழா தினந்தோறும் நடந்துவருகிறது. தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக, எதிர்க்கட்சியில் இருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எல்லா கட்சிகளும் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் பிரசாரம் முடிய உள்ள நிலையில் பிரதமர் மற்றும் தேசிய - மாநில தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் பிரசார களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் அனல் பறக்கிறது களம்.
கர்நாடக தேர்தல் களத்தில் திரை பிரபலங்களின் பங்கு, பெரும் எதிர்பார்ப்பைக் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அப்படியான சில பிரபங்கலங்களின் பட்டியலை இங்கே காண்போம்!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப், தர்ஷன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களில் கிச்சா சுதீப் கட்சியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பாஜக-வுக்கு பிரசாரம் செய்கிறார்.
இது குறித்து கிச்சா சுதீப் பேசுகையில், “அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அரசியலுக்கு வரச் சொல்லி பலமுறை அழைப்புகளும் வந்தன. ஆனாலும் அரசியலில் இறங்காமலேயே சேவை மட்டும் செய்துவந்தேன். இனியும் அப்படியே செய்யவேண்டும் என நினைக்கிறேன். ‘நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதைப் பற்றி நான் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. கட்சிகளில் இணையவில்லை என்றாலும்கூட இப்போதைக்கு பாஜகவுக்கு பிரசாரம் செய்வேன், ஓட்டு கேட்பேன். ஆனால் கட்சியில் சேர மாட்டேன்” என்றுள்ளார்.
நடிகர் கிச்சா சுதீப்பின் ஆதரவு கரம் பாஜகவுக்கு பெரும் லாபத்தைப் பெற்றுத் தரும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் கர்நாடகாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். கிச்சா சுதீப்பின் பாஜக சார்பு முடிவு, பலரை ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ்கூட, “சுதீப்பின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது” என தெரிவித்திருந்தார்.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாரின் மனைவியும் மறைந்த முதல்வர் பங்காருப்பாவின் மகளுமான கீதா சிவராஜ் காங்கிரஸில் இணைந்து, கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார். மேலும் நடிகர் சிவராஜ் குமாரும் சித்தராமைய்யாவுக்காக காங்கிரஸூக்குத் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல நடிகர் துனியா விஜய்யும், சித்தராமைய்யாவுக்கு ஆதரவாக காங்கிரஸின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் பாஜகவுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ளார். கர்நாடகாவில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் சிக்கல்பூர் தொகுதியில் இவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரபல நடிகையும் மண்டையா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யாவும் இந்த பிரசார பட்டியலில் இருக்கிறார். தனது சொந்த ஊரான மண்டியாவிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய இவர், தன் பிரசாரத்தின்போது தன் சாதியை குறிப்பிட்டு “நானும் அந்த (பெயரை குறிப்பிட்டே அவர் பேசினார்) சாதி தான். இதனை என்னிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது” எனக் கூறியிருந்தார். இது விவாதத்தை எழுப்பியுள்ளார்.
ரம்யாவின் இந்த பேச்சு, அவர் சாதி அரசியலை முன்னெடுத்து வாக்கு வங்கியை உயர்த்த முற்படுகிறாரா எனப் பல தரப்பிலும் வாதங்களை எழுப்பின. ‘சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்வது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது’ எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கர்நாடக தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துவருகிறது. என்னதான் திரைத்துறையிலிருந்து நேரடி அரசியலுக்கு வருவோர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளேவும் திரைத்துறையினரை நாடுகிறது என்பது, நகைமுரணன்றி வேறென்ன!
இதில் உங்க கருத்துகளை, கமெண்ட்டில் சொல்லுங்கள்!