நடிகை ஹர்ஷிகா பூனாச்சா முகநூல்
இந்தியா

“நாம் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் வசிக்கிறோமா?” - கன்னட நடிகையின் திடுக்கிடும் பதிவு!

“அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று என் கணவரை தாக்கியது” எனக்கூறி நடிகை ஹர்ஷிகா பூனாச்சா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கன்னட நடிகர் நடிகையான புவன் மற்றும் அவரின் மனைவி ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த கும்பல் ஒன்று அவர்கள் கன்னட மொழியில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புவனை தாக்கியுள்ளது. இதையடுத்து சம்பவத்திற்கு வேதனை தெரிவித்து ஹர்ஷிகா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், “இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நானும் எனது கணவரும் எங்களின் குடும்பத்தினருடன் பெங்களூருவின் ஃப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரில் உள்ள உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிட சென்றோம். பின் புறப்படுவதற்காக அங்கிருந்து எங்கள் காரை எடுத்துச் செல்ல முயன்றபோது, இரண்டு நபர்கள் காரின் ஜன்னல் அருகே வந்தனர். ‘உங்கள் காரை பின்புறம் எடுத்தால் அது எங்கள் வாகனத்தின் மீது இடித்து விடும்’ என்று கூறினார்கள். நாங்களும் அவர்களை மதித்து, எங்கள் காரை சிறிது முன்னோக்கி நகர்த்தினோம். அச்சமயம், அவர்கள் எங்களை அநாகரிகமாக பேசினார்கள்.

எங்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று கூறினார்கள். என் கணவரை அடிக்க முயன்றார்கள். அப்போது திடீரென 30 பேர் ஒன்றாக கூடி என் கணவரின் தங்கச்சங்கிலியை பறித்தார்கள். என் கணவர் அதை விடாமல் பிடித்து இழுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

மேலும், எங்கள் காரில் குடும்பத்தினர் இருந்ததால், நாங்கள் சண்டையிட வேண்டாம் என்று நினைத்தோம். இதனைதொடர்ந்து, நாங்கள் கன்னடத்தில் பேசியதுபோது அவர்களின் கோபம் மேலும் அதிகரித்தது. அந்த பகுதியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிந்தவர் என்பதால், நான் அவரை உடனே தொடர்பு கொண்டேன்.

இதனை அறிந்த அவர்கள் உடனே அங்கிருந்து ஓடிவிட்டனர். சிறிது துாரத்தில் ஏ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் நின்றார். அவரிடம் நடந்த பிரச்னையை கூறினோம். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது.

நான் வாழும் ஊரில் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. பெங்களூரில் உள்ள உள்ளூர்வாசிகளான நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? நாம் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் வசிக்கிறோமா? கர்நாடகத்தில் கன்னடத்தில் பேசுவது தவறா? இது போன்ற விஷயங்களில் இனிமேல் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் இந்த பதிவையிட்டுள்ளேன்.

இன்னும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அரசு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். மேலும் இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இப்பதிவு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.