தர்ஷனுக்கு ஜாமீன் pt web
இந்தியா

கொலை வழக்கு | கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்.. பெல்லாரி மத்திய சிறையில் இருந்து விடுவிப்பு

ரசிகரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர், பெல்லாரி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Angeshwar G, PT WEB

சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சாமி என்ற ரசிகர் கொடூரமாக கொல்லப்பட்டு, உடல் கால்வாயில் வீசப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப் பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷன், அங்கு, சிறை விதிகளை மீறி சொகுசு வாழ்க்கையில் இருந்ததால், பெல்லாரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

நடிகர் தர்ஷன்

இந்நிலையில், கடும் முதுகுவலி காரணமாக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதனிடையே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதால், உரிய சிகிச்சை பெறுவதற்காக, இடைக்கால பிணை கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இந்த வழக்கில் சாட்சிகளை அழிக்க முயற்சிக்க மாட்டார் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக தர்ஷனுக்கு 6 வாரங்கள் பிணை வழங்கப்பட்டது.

ஜாமீன் நிபந்தனைகளாக, தர்ஷன் தனது பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும். தனது மருத்துவ சிகிச்சை தொடர்பான விபரங்களை ஒரு வாரத்திற்குள் தர்ஷன் சமர்பிக்க வேண்டும். சாட்சிகளை தொடர்புகொள்ளவோ, சாட்சிகளை அச்சுறுத்துவதோ, சாட்சியங்களை அழிக்கவோ முயற்சிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷன்

ஜாமீன் உத்தரவு நகல் மாலை 5 மணிக்கு பெல்லாரி சிறைக்கு வந்தது. இதையடுத்து, தர்ஷன், பெல்லாரி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். நடை தளர்ந்த நிலையில் தர்ஷன் சிறை வளாகத்தில் நடந்து வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவர் வெளியில் வந்ததும் அவரது ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். பெல்லாரியில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச எல்லை வரையிலான 25 கிமீ தூரத்திற்கு பெல்லாரி காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.