இந்தியா

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்: எம்பி கனிமொழி

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்: எம்பி கனிமொழி

webteam

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பூஜ்ய நேரத்தின் போது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நடைபெற்ற வன்முறை தொடர்பான பிரச்னையை திமுக எம்பி கனிமொழி எழுப்பினார். அந்த வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் மாணவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக பல்வேறு மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இவற்றை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற தாக்குதல் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பேசினார்.

மேலும், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசும் போது, மகாராஷ்டிராவில் நடைபெற்ற கலவரத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். வன்முறைக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நவநீத கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் சாதிய, வகுப்புவாத வன்முறைகளை கைவிட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வன்முறை சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.