குல்விந்தர் கவுர், கங்கனா எக்ஸ் தளம்
இந்தியா

கன்னத்தில் அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள்.. சாடிய கங்கனா ரனாவத்!

Prakash J

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்றுள்ள நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர், அவரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கங்கனா ரனாவத்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பான நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த அந்தப் பெண் காவலரான குல்விந்தர் கவுர், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதேநேரத்தில், இதுதொடர்பாக குல்விந்தர் கவுரும் விளக்கம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குறிப்பாக, விவசாயச் சங்கங்கள் பெண் காவலருக்கு ஆதரவாக நாளை (ஜூன் 9) பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் காவலருக்கு, மொஹாலியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங் பெயின்ஸ் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். அதேபோல், பிரபல பாடகர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு தான் வேலை வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவசாயச் சங்கத்தினர் சிலர், பெண் காவலரின் தாயாரைச் சந்தித்தும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஒடிசா தேர்தல் தோல்வி| வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் கட்சியினர்.. விளக்கமளித்த நவீன் பட்நாயக்!

இந்த நிலையில், தன்னை கன்னத்தில் அறைந்த பெண் காவலரை பாராட்டுபவர்களை கங்கனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஒவ்வொரு பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி, கொலையாளி, திருடன் என அனைவரும் குற்றத்தைச் செய்வதற்கு உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது நிதிசார்ந்த காரணங்கள் இருக்கும். எந்தக் குற்றமும் ஒரு காரணமின்றி நடக்காது. இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஓர் உந்துதலாக இருக்கும். இவ்வளவு வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றைச் சுமக்காதீர்கள், தயவுசெய்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நீட் தேர்வு| வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு முடிவு!