கங்கனா ரனாவத் எக்ஸ் தளம்
இந்தியா

வேளாண் சட்டம் குறித்து சர்ச்சை கருத்து|எச்சரித்த பாஜக.. மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்! நடந்தது என்ன?

வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்கு கங்கனா ரனாவத், மன்னிப்பு கேட்டுள்ளார்

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். அந்த வகையில், ”நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 2021இல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் ரத்து செய்யப்பட்ட பண்ணைச் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

விவசாயிகளே அதைக் கோர வேண்டும். அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு வலிமையான தூணாக இருக்கிறார்கள். நான் அவர்களிடம் முறையிட விரும்புகிறேன். உங்கள் சொந்த நலனுக்காக சட்டங்கள் திரும்ப வேண்டும்” என சமீபத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேட்டியை எக்ஸ் தளத்தில் பதிந்த காங்கிரஸ், "இந்த கருப்புச் சட்டங்கள் (இப்போது மீண்டும் கொண்டு வரப்படாது)... மோடியும் அவரது எம்.பி.க்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி" எனத் தெரிவித்திருந்தது. அதுபோல் ஆம் ஆத்மி கட்சியும் கண்டித்திருந்தது.

ஆம் ஆத்மி கட்சியின் பல்பீர் சிங், "மூன்று பண்ணைச் சட்டங்கள் குறித்து அவரிடம் கேளுங்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியாது என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். அவர் செய்வது எல்லாம் நகைச்சுவை. தயவுசெய்து அவரது கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல் அதே கட்சி எம்பி மல்விந்தர் சிங் காங், “விவசாயச் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிப்பது மில்லியன் கணக்கான விவசாயிகளையும், நாட்டில் தியாகம் செய்த 750 விவசாயிகளையும் அவமதிக்கும் செயலாகும்" எனத் தெரிவித்திருந்தார்.

கங்கா ரனாவத்தின் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “கட்சி சார்பில் இதுபோன்று கருத்து சொல்ல கங்கனா ரணாவத்துக்கு அதிகாரம் இல்லை” என எச்சரித்திருந்தார். இதையடுத்து, கங்கனா ரனாவத், தாம் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் கலைஞர் மட்டுமல்ல, பாஜக தொண்டர் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். எனது கருத்துகள் தனிப்பட்டதாக இருக்கக்கூடாது, கட்சியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். எனது கருத்துகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன், என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இதே வேளாண்மைச் சட்டம் தொடர்பாக அவர் பேசிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கங்கனாவை, பாஜக தலைமை அழைத்து கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.