கங்கனா ரனாவத், அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி எக்ஸ் தளம்
இந்தியா

”உத்தவ் தாக்கரேவுக்கு நடந்த துரோகம்” | ஷிண்டேவை மறைமுகமாக சாடிய ஜோதிர்மட சுவாமி; கங்கனாவின் பதிலடி!

Prakash J

ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அண்மையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், “நாம் அனைவரும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். பாவம் - புண்ணியத்துக்கு ஒரு வரையறை உள்ளது. துரோகம் செய்வது மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் நாங்கள் அனைவரும் வேதனையடைந்தோம். வஞ்சகம் செய்பவன் இந்துவாக இருக்க முடியாது. அதனைப் பொறுத்துக்கொள்பவனே இந்து. மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய தேர்தலில் பிரதிபலித்தது” எனத் தெரிவித்திருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாஜக ஆதரவுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சி ஆட்சியில் உள்ளது. இவருக்கு ஆதரவாக அஜித் பவாரின் கட்சியும் உள்ளது. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து பிரிந்து வந்து அரியணை ஏறினார். பின்னர், அவருடைய கட்சியையே உண்மையான சிவசேனாவாக இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இதை உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அவருக்கு துரோகம் செய்துவிட்டதாகவே கருதினர்.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

இந்த நிலையில்தான் சங்கராச்சாரியாரின் பேட்டிக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. அதாவது, ஏக்நாத் ஷிண்டே பெயரை சங்கராச்சாரியார் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் துரோகி என்று குறிப்பிட்டது ஷிண்டேவைத்தான் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகின. இந்தச் சூழலில்தான் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் இதற்கு கடும் கண்டன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”அரசியலில், ஒரு கட்சியின் கூட்டணி, ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது. இதை அரசியலமைப்பும் அங்கீகரித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில்கூட முதலில் 1907லும் பிறகு 1971லும் பிளவு ஏற்பட்டது. ஓர் அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பனை செய்வாரா? சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும் அவரது செல்வாக்கையும் மதக் கல்வியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஓர் அரசனே தன் குடிமக்களைச் சுரண்டத் தொடங்கினால் துரோகம்தான் இறுதி வழி என்று நம் மதமே கூறுகிறது. சங்கராச்சாரியார் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குற்றம்சாட்டியதன்மூலம் நம் அனைவரது உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார். மேலும் இதுபோன்ற விஷயங்களைப் பேசி இந்து மதத்தையும் அவமதித்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் ஓய்வு ஏன்| மனைவி, மகனுடன் செர்பியா புறப்பட்ட ஹர்திக்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?