கங்கனா ரனாவத் எக்ஸ் தளம்
இந்தியா

”வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

வேளாண் சட்டங்கள் குறித்து, இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் மீண்டும் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். அந்த வகையில், ”நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 2021இல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் ரத்து செய்யப்பட்ட பண்ணைச் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவசாயிகளே அதைக் கோர வேண்டும். அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு வலிமையான தூணாக இருக்கிறார்கள். நான் அவர்களிடம் முறையிட விரும்புகிறேன். உங்கள் சொந்த நலனுக்காக சட்டங்கள் திரும்ப வேண்டும்” என சமீபத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேட்டியை எக்ஸ் தளத்தில் பதிந்த காங்கிரஸ், "இந்த கருப்புச் சட்டங்கள் (இப்போது மீண்டும் கொண்டு வரப்படாது)... மோடியும் அவரது எம்.பி.க்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி" எனத் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2020இல் வேளாண் பொருட்கள் விற்பனை, விலை நிர்ணயம், பண்ணைப் பொருட்களைச் சேமிப்புக்கிடங்கில் பராமரித்தல் போன்றவற்றில் தங்களின் உரிமையைப் பாதுகாக்க உதவிய விதிகளில் தளர்வு ஏற்படுத்தி வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் புதிய வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் ஓர் ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் பலர் தங்களது உயிரை இழந்தனர். உலக அளவில் இந்தப் போராட்டம் அப்போது பேசுபொருளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டெல்லி | யுபிஎஸ்சி மாணவியின் அறையில் ரகசிய கேமரா.. சிக்கிய வீட்டு உரிமையாளரின் மகன்! பகீர் சம்பவம்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இதே வேளாண்மைச் சட்டம் தொடர்பாக அவர் பேசிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கங்கனாவை, பாஜக தலைமை அழைத்து கண்டித்திருந்தது. தற்போதும் தலைமையையும் மீறி கங்கனா பேசி வருவதாக அவரது ஆதரவாளர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னதாக, “இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடன் வாங்குகிறது. பிறகு அந்தப் பணத்தை சோனியா காந்திக்கு மடைமாற்றி விடுகிறது. மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கினால் அந்தப் பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு செல்கிறது. பிறகு அது சோனியா காந்திக்கு செல்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

கங்கனா ரனாவத்

இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் விக்ரமாதித்ய சிங், “மத்திய அல்லது மாநில அரசின் நிதி சோனியா காந்தியிடம் தரப்படுகிறது என்பதைவிட முட்டாள்தனமான கருத்து எதுவும் இருக்க முடியாது. சோனியா காந்திக்கு ஒரு ரூபாய் தரப்பட்டிருந்தாலும் கங்கனா அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். இல்லாவிடில் அவர் மன்னிப்புகோர வேண்டும். இல்லையேல், அவர் மீது வழக்கு தொடரப்படும். கங்கனா அடிக்கடி இமாச்சலபிரதேசம் வருவதில்லை. அவரது ‘எமர்ஜென்சி' திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள அவர் சோனியா காந்தி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பு, ராகுல் காந்தியை அவர் கடுமையான விமர்சித்ததுடன், சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா|வண்டியில் வைத்த பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழிப்பு; வியாபாரியின் அநாகரீக செயல் - வீடியோ!