இந்தியா

“வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை சிறையில் அடைக்க வேண்டும்”- கங்கனா ரனாவத் ஆவேசம்

Rasus

நிர்பயா கொலை குற்றவாளிகளுடன், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான அநீதிக்கு சட்டரீதியிலாக போராடும் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது ட்விட்டரில், நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் வேதனையை தாம் முழுமையாக அறிவதாகவும் எனினும் ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளி நளினியை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். நிர்பயாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மரண தண்டனையை தாம் எதிர்ப்பதாக இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று தனக்குப் பரிந்துரை செய்ய இந்திரா ஜெய்சிங் யார்? என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடும் கண்டனம் தெரிவித்தார். “ நாடே குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில் இவர்களைப் போன்றவர்களால்தான் நீதி கிடைப்பதில்லை. இந்திரா ஜெய்சிங் இவ்வாறு கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை பலமுறை உச்ச நீதிமன்றத்தில் நான் சந்தித்துள்ளேன். ஆனால் ஒருமுறை கூட என்னுடைய நிலை குறித்து அவர் கேட்டதில்லை. அப்படி இருக்கையில் இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது போன்றவர்களால் தான் பாலியல் குற்றங்கள் குறைவதில்லை. குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வரை எனக்கு நிம்மதி இல்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, நிர்பயா குற்றவாளிகளுடன் 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபோன்ற பெண்கள்தான் அசுரர்களையும் கொலையாளிகளையும் பெற்றெடுக்கின்றனர் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.