இந்தியா

“கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்திய-அமெரிக்க உறவு வலுப்பெறும்” - கமலா ஹாரிஸின் தாய்மாமா

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியா-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் என கமலா ஹாரிஸின் தாய்மாமா பாலச்சந்திரன் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸின் தாய்மாமா கோபாலன் பாலச்சந்திரன் டெல்லியில் "புதிய தலைமுறைக்கு" பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த கமலா ஹாரிஸின் வெற்றி வாய்ப்பு என்பது 80 முதல் 90 சதவீதம் வரை உறுதியாகியுள்ளது. ட்ரம்ப் தற்போது அமெரிக்காவின் அதிபராக இருப்பதால் அமெரிக்கா மீதான உலக மக்களின் நம்பிக்கை என்பது குறைந்துவிட்டது. ஆனால் அமெரிக்காவின் உதவி என்பது உலக நாடுகளுக்கு நிச்சயம் வேண்டும். இந்தியாவுக்கு கூட சீன பிரச்னை காரணமாக அமெரிக்காவின் உதவி நிச்சயம் தேவைப்படும். ஆனால் அவற்றை ட்ரம்பால் செய்து தர முடியாது.

இதனால் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தல் பரப்புரையின் போது இந்தியாவை கடுமையாக சாடிய ட்ரம்ப் சொல்வதை யாரும் கேட்கக் கூடாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா விவகாரத்தில் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நிச்சயமாக நான் அமெரிக்கா செல்வேன். ஜனவரி மாதத்தில் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி இருக்கும்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்பு மேலும் வலுவடையும். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவிற்கு புத்திசாலித்தனமான அதிபர் கிடைப்பார். கமலா ஹாரிஸ் அவருடைய சித்தியை, சித்தி என தெரிவித்தது யதார்த்தம். எப்பொழுதும் அப்படியே அழைப்பார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது எனது மகள் கமலா ஹாரிஸ் உடன் இருப்பார்” எனத் தெரிவித்தார்.