இந்தியா

“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம் 

“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம் 

webteam

கல்கி பகவான் தனது ஆசிரமத்தில்தான் இருப்பதாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்துகள் உள்ளன. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16-ஆம் தேதி, அந்த இடங்களில் வருமானவரித்துறை சோதனையை தொடங்கியது. தொடர் விசாரணையில், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. மேலும் அவரது வாரிசுகள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறி இருந்தது.

இந்நிலையில் கல்கி பகவான், தங்கள் ஆசிரமம் மீதான அவதூறுகளுக்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் என் அன்பு வணக்கம். முதலில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு தக்க வகையில் பதில் அளித்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம். முதலில் ஒரு விஷயத்தை கூற வேண்டும். நாங்கள் நாட்டை விட்டு எங்கேயும் தப்பி ஓடிவிடவில்லை. இங்கே நேமம் கிராமத்தில்தான் வசிக்கிறோம். என் உடல்நிலைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோகியத்துடன் இருக்கிறேன்.

ஆனால் நாங்கள் நாட்டை விட்டு போய்விட்டோம். இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டோம்.. இப்படி பலவிதமான வதந்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. நான் நேமத்தில் இருந்துதான் இயங்கி வருகிறேன். என் சத்யலோக, இங்கேதான் உள்ளது. பல்வேறு வகுப்புகளை நான் இங்கேதான் நடத்தி வருகிறேன். அது அனைவருக்கும் தெரியும். 

ஆகவே நான் எந்த நாட்டுக்கும் போகவில்லை. இந்த நாட்டில்தான் இருக்கிறேன். நான் நாட்டைவிட்டு போய் விட்டேன் என்று வரிமானவரித்துறை கூறவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறுகின்றன. ஆனால் எல்லாமே இங்கு வழக்கம் போலவே நடைபெற்று வருகிறது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.