டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டில் இரண்டு முறை மட்டுமே தனது அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி உள்ளதாக ஆம் அத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் உறவினர்கள் மீதும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் முதல்வர் கெஜ்ரிவால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு சர்கார் 3 திரைப்படம் பார்ப்பதற்காக தன் இல்லத்திலிருந்து வெளியே வந்ததாக கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்திற்கு எப்போது சென்றார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது முதல்வர் கடந்த ஆண்டில் இரண்டு முறை மட்டுமே அலுவலகத்திற்கு சென்றுள்ளார் என்பது டெல்லி மக்களுக்கு தெரியாது எனவும் கபில் மிஸ்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கெஜ்ரிவாலின் உறவினர் சட்டவிரோதமாக நில ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தியதால் கடந்த வாரம் கட்சியில் இருந்து கபில் மிஸ்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் கபில் மிஸ்ராவின் மோசமான செயல்பாடு மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயண விவரங்களை வெளியிடக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மிஸ்ரா தனது போராட்டத்தை கடந்த திங்கட்கிழமை கைவிட்டார்.