இந்தியா

பழிவாங்கும் நோக்கத்தோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் - கே. எஸ். அழகிரி

பழிவாங்கும் நோக்கத்தோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் - கே. எஸ். அழகிரி

webteam

பழிவாங்கும் நோக்கத்தோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சென்னை வந்திருந்தார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடத்த அனுமதித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் இதற்கு எப்படி அனுமதியளிக்கப்பட்டது என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், பழிவாங்கும் நோக்கத்தோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து சில மாதங்களுக்கு முன்னதாகவே, கல்லூரி மாணவிகள் சங்கம் திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படாமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலே அழைக்கப்பட்டதாகவும், எம்.பி. ஒருவர் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தடை ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே கூறிய நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் அதிமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு பழிவாங்கும் நடவடிக்கைக்கு துணை போனால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். எனவே, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை திரும்ப பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.