மத்தியப் பிரதேச காங்கிரசில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்எல்ஏக்களும், பாரதிய ஜனதாவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் அரசுக்கு 4 சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்எல்ஏவும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி அக்கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்தார். அத்துடன் அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் அமைச்சரவையை கூட்டினார் கமல்நாத். இதில் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய கமல்நாத், மாஃபியா உதவியுடன் யாரும் தனது அரசை வீழ்த்துவதை அனுமதிக்கமுடியாது எனக் கூறினார். இதனையடுத்து அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசியல் குழப்பம் குறித்து பாஜகவை சேர்ந்த ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறும்போது, “ம.பி.யில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம். இதில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அரசாங்கத்தை வீழ்த்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை” எனத் தெரிவித்தார்.
இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெறுவது உறுதி. எனினும் மூன்றாவது எம்பி பதவிக்கான தேர்தலில் கடும் போட்டியே நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரசில் அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியா பாஜக சார்பில் மாநிலங்களவை எம்பியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.