இந்தியா

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு

webteam

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுக்கொண்டார்.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது. 

இந்தக் குழுவை நியமிப்பதில் சிக்கல் இருப்பதாக பலமுறை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு லோக்பால் அமைப்பதற்கு கெடு விதித்து உத்தரவிட்டது. இதனால் லோக்பால் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. அதன்படி லோக்பால் தேர்வுக் குழுவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார்.

உத்தரவின்படி, அதில் லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார்.  நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நீதிபதிகள் திலிப் பி.போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோரும்,  நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தினேஷ் குமார் ஜெயின், ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் இந்தர்ஜித் பிரசாத் கௌதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை அவர் சந்தித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பினாகி சந்திரகோஷ் 2017-ல் பணி ஓய்வு பெற்றார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை அவர் விசாரித்துள்ளார்.