இந்தியா

இன்று கூடுகிறது கொலீஜியம் - நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தில் முடிவு எட்டப்படுமா?

இன்று கூடுகிறது கொலீஜியம் - நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தில் முடிவு எட்டப்படுமா?

rajakannan

நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக கொலீஜியம் இன்று கூடவிருப்பதாகத் தெரிகிறது.

உத்தராகண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம். ஜோசப்பையும், டெல்லி மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க ஒப்புக் கொண்ட மத்திய அரசு, கே.எம்.ஜோசப்பின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியது. ஜோசப்பை விட பணிமூப்பில் பல நீதிபதிகள் இருப்பதாகவும், அவரது சொந்த மாநிலமான கேரளாவிற்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் கூடிய கொலீஜியம் பரிந்துரை குறித்து முடிவெடுக்கவில்லை. 

இந்நிலையில், இன்று கொலீஜியம் கூடி முடிவெடுக்க உள்ளது. இதற்கிடையில், கொலீஜியத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான செலமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கே.எம். ஜோசப்பின் பெயரை தான் திரும்ப பரிந்துரைப்பதாகவும், எனவே கொலீஜியத்தைக் கூட்டி ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்று ஜோசப்பை மீண்டும் பரிந்துரைப்பதா, அல்லது அந்த பரிந்துரையைத் திரும்பப் பெறுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த நீதிபதியான செலமேஸ்வர், அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால், கொலீஜியத்தில் உள்ள அவருடைய இடத்திற்கு நீதிபதி ஏ.கே. சிக்ரி வர இருக்கிறார்.