இந்தியா

‘பழைய வழக்கங்களில் எனக்கு உடன்பாடில்லை’ - பிரிவு உபசார நிகழ்வை நிராகரித்த நீதிபதி செல்லமேஸ்வர்

‘பழைய வழக்கங்களில் எனக்கு உடன்பாடில்லை’ - பிரிவு உபசார நிகழ்வை நிராகரித்த நீதிபதி செல்லமேஸ்வர்

rajakannan

உச்சநீதிமன்ற பார் அசோஷியேசன் வழங்கவிருந்த பிரிவு உபசார நிகழ்வை மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் நிராகரித்துள்ளார். தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதி ஓய்வு பெறுகிறார். 

கடந்த ஜனவரி மாதம் பத்திரியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகப் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகவும், அதனால் எல்லா நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே நீதிபதி செல்லமேஸ்வர் கருத்துக்களும் செயல்களும் விவாதத்திற்கு ஆளானது. 

இந்நிலையில், புதியதொரு விவாதத்திற்கு வழிவகுக்கும் வகையில் பார் அசோஷியேசன் வழங்கவிருந்த பிரிவு உபசார நிகழ்வை செல்லமேஸ்வர் நிராகரித்துள்ளார். பார் அசோஷியனை சேர்ந்தவர்கள் செல்லமேஸ்வர் இல்லத்திற்கே சென்று பேசினர். ஆனால், வர முடியாது என திட்டவட்டமாக் தெரிவித்துவிட்டார். மூன்றாவது புதன்கிழமையாக நீதிபதி செல்லமேஸ்வர் உச்சநீதிமன்றத்திற்கு வரவில்லை.

வழக்கமாக கடைசி வேலை நாளில் இந்த பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் மே 18ம் தேதி அவரது கடைசி வேலை நாளில் இந்த விருந்தினை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து விடை பெற்ற போது பிரிவு உபசார நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.