உடனடி நீதி எப்போதுமே இருக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சட்டத்திற்கு புறம்பான கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “நீதி என்பது எப்போதுமே உடனடியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அத்துடன் நீதி ஒருபோதும் பழிவாங்கும் வடிவத்தை எடுக்கக்கூடாது. பழிவாங்குவதாக இருந்தால் நீதி அதன் தன்மையை இழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டார். அதேசமயம் நாட்டின் நீதித்துறையில் சில குறைபாடுகள் இருப்பதையும், அதனை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பொதுவாகவே வழக்குகளில் நீதி உடனடியாக கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாரின் பிடியிலிருந்து தப்ப முயற்சித்தபோது என்கவுன்ட்டர் செய்ய நேரிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 4 பேர்
என்கவுன்ட்டருக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம். உடனடி என்கவுன்ட்டரை வரவேற்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.