இந்தியா

துருக்கி நிலநடுக்கம்: மீட்புப்பணிகளில் இந்திய மோப்ப நாய்கள்! நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

துருக்கி நிலநடுக்கம்: மீட்புப்பணிகளில் இந்திய மோப்ப நாய்கள்! நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

JustinDurai

துருக்கிக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களுடன் சென்றுள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்திருக்கிறது துருக்கி. இதில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் இரவுப் பகலாக ஈடுபட்டுள்ளனா். நிலநடுக்கத்தால் துருக்கி மட்டுமின்றி அதன் அண்டை நாடான சிரியாவும் பலத்த சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது.

இச்சூழலில், நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள துருக்கிக்கு உதவ முன்வந்துள்ளது இந்தியா. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் (NDRF), இரு குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். துருக்கிக்கு விரைந்துள்ள அவர்கள் அந்நாட்டு மீட்புப் படையினருடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் சென்றுள்ளன. ஜூலி, ரோமியோ, ஹனி, ராம்போ என்ற பெயர் கொண்ட அந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அதோடு மருத்துவக் குழுவினரும் துருக்கி சென்றுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய பிரதமர் மோடி, “உங்களுக்காக 140 கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது” என்று உறுதி அளித்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வரும் இந்தியாவுக்கு
துருக்கி தூதர் நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படை, நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் மீட்புப் பணிகளில் விரைவாக ஈடுபடுகிறது. இக்குழு பேரிடர் சமயத்தில் இந்தியாவில் மட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையில் வெளிநாடுகளுக்கும் மீட்புப்பணிக்காக அனுப்பப்படுகிறது. கடந்த 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும், 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போதும் தேசிய பேரிடர் மீட்புப் படை அங்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டது.