இந்தியா

"சமூக ஊடக கருத்துகளை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது"- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

webteam

சமூக ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கப்படும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதிகள் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி முறையில் உரையாற்றிய அவர், "சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான கருத்தை பெரும்பாலோர் பதிவிட்டிருந்தால் அது சரியாக இருக்கும் என்று உறுதிபடக் கூறிவிட முடியாது.

பொதுமக்கள் கருத்துக்களை மிகப்பெரிய அளவில் எதிரொலித்தாலும், அதில் எது சரி - எது தவறு - அல்லது எது உண்மை - எது பொய் என பிரித்தறியும் தன்மை சமூக ஊடகங்களுக்கு கிடையாது.

இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை அதிகம், கல்வியறிவு குறைவு போன்ற பாதகமான அம்சங்கள் இருந்தாலும் மக்களின் ஜனநாயக முதிர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நாட்டில் இதுவரை நடந்துள்ள 17 பொதுத்தேர்தல்களில் எட்டு தேர்தல்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.