இந்தியா

“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை” - பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி

“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை” - பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி

webteam

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இதையடுத்து பேரறிவாளன் தன்னை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,  ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜராஜ மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், “இரண்டு ஆண்டுகளாக ஆளுநரிடம் இந்த கருணை மனு உள்ளது. ஆனால் அவர் முடிவெடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் இதற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்காத நிலையில் இருக்கிறார். சட்டப்படியான முடிவை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் என கருத்தாக தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சிபிஐ சார்பில் பல்நோக்கு ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது. சிபிஐ அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் உடனே முடிவெடுக்க முடியும்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கு 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.