இந்தியா

நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக் குழு

webteam

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்காக மூத்த நீதிபதி பாப்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, தம்மீதான புகார்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருப்பதாக தெரிவித்தார். 

தலைமை நீதிபதி மீதான புகார் தொடர்பான வழக்கில், அவரே நீதிபதியாக இருப்பதற்கு, சில வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிண்டன் நரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இதனிடையே, தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கில் ஆஜராகுவதற்காக ஒன்றரை கோடி ரூபாய் தமக்கு வழங்க அஜய் என்பவர் முன்வந்ததாக, வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். 

நேற்று அருண் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரணையை தொடங்கியபோது, வழக்கறிஞர் உத்சவ் சிங் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, தம்மீதான பாலியல் புகாரை விசாரணை நடத்துவதற்காக மூத்த நீதிபதி பாப்டே தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். ரஞ்சன் கோகாய்க்கு பிறகு, தலைமை நீதிபதியாக பதவியேற்கும் பாப்டே, தனது விசாரணை குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரை இணைத்துள்ளார். 

இந்த குழுவினர், ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக அந்த பெண்ணுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த விசாரணைக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.