உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கறிஞர்கள் நீதிபதியின் அறையில் கூடி சலசலப்பை ஏற்படுத்தியதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து வழக்கறிஞர்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின்போது பல வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், நிலைமை குறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நீதிபதி அறையிலிருந்து துரத்தப்பட்டதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர்கள் வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காசியாபாத் கூடுதல் காவல் ஆணையர் தினேஷ் குமார், “ஜாமீன் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிபதி அறையில், முன்ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பல வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். மனுவை மாற்றக்கோரியதற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரச்னை வெடித்தது. அது, பின்னர் மோதலாக மாறியது. அதன்பிறகு நாங்கள், வழக்கறிஞர்களை அவர்களது அறைக்கு அனுப்பிவைத்தோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.