பாஜக தேசியத் தலைவராக வரும் 22ஆம் தேதி ஜெ.பி.நட்டா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், மத்திய உள்துறை மந்திரி பதவியை அமித்ஷா ஏற்ற நிலையில், ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
56 வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப் பிரதேச பாஜக அரசியலில் மந்திரியாக இருந்துள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாஜக புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது பாஜக செயல் தலைவராக உள்ள அவர், வரும் 22-ம் தேதி பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் யார் என நாளை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பொறுப்பிற்கான பரிந்துரையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 5 ஆம் தேதி மத்திய கட்சி அதிகாரிகள் விளக்கம் பெற்று சென்ற நிலையில் தமிழக பாஜக தலைவர் யார் என அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.