இந்தியா

உ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு

உ.பி: விஹெச்பி தலைவர் மீது நில அபகரிப்பு குற்றஞ்சாட்டிய பத்திரிகையாளர் மீது வழக்கு

JustinDurai
ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகியும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவருமான சம்பத் ராய் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பத்திரிகையாளர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினீத் நரேன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான அல்கோ லகோதி என்பவரின் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கோசாலையை, ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகியும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவருமான சம்பத் ராயும் அவரது சகோதரர்களும் அபகரித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிலம் வாங்கியதில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதில் சம்பத் ராய் பெயரும் அடிபட்டிருந்த நிலையில், வினீத் நரேனின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சம்பத் ராயின் சகோதரர் சஞ்சய் பன்சால், பிஜ்னோர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். பத்திரிகையாளர் வினீத் நரேன் உள்ளிட்ட 3 பேரிடம் தன் மீதான புகாருக்கு போனில் விளக்கம் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை கொலை செய்வதாக மிரட்டினர் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வினீத் நரேன் மற்றும் அவரது இரு உதவியாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 15 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.