”தென்மாநிலங்களில் எங்குமே தற்போது பாஜக ஆட்சியில் இல்லை. பாஜக இதை எதிர்பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே இதைத்தான் அனுமானித்தன. அதேபோல் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் ஒவ்வொரு விஷயத்தையும் மிகச்சரியாக திட்டமிட்டு நகர்த்தினர். குறிப்பாக 40% கமிஷன் பிரச்னையை மிகப்பெரிய அளவில் பரப்புரையில் பயன்படுத்தியது சாதகமாக அமைந்தது. அதேபோல் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுக்கு இடையே இருந்த கருத்துமோதல்கள் மற்றும் வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு தேர்தலை ஒன்றாக முன்னெடுத்தது காங்கிரஸுக்கு மற்றொரு பலமாக அமைந்தது.
அதேபோல், 2004 மற்றும் 2018-ஐத் தவிர ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் பாஜக அல்லது காங்கிரஸ் என மாறி மாறித்தான் ஆட்சி அமைத்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் இப்போது ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால் போன தேர்தலில் பாஜகவுக்கு சாதகம் இல்லாதபோதும், ஆட்சியமைத்ததுதான் இப்போது மக்களின் எதிர்ப்பை சந்திக்கவேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பாஜக எந்த திட்டங்களையும் செய்ததாக இந்த தேர்தல் பரப்புரையில் அவர்களால் பேசமுடியவில்லை. பிரிவினைவாத அரசியலை தொடர்ந்து பேசிவந்ததும் பாஜகவுக்கு ஒரு பெரிய அடி. ஹிஜாபோ அல்லது பஜ்ரங்தல்லோ அல்லது மக்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி உடை அணியவேண்டும் என்று பேசினால் இனிமேல் மக்கள் ஆதரவு இருக்காது என்பதை கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு உணர்த்தியிருக்கிறது”