இந்தியா

தர ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு

rajakannan

ராஜஸ்தான் அரசு மேற்கொண்ட தர நிர்ணய ஆய்வில் ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு தோல்வி அடைந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர். ஃபார்மால்டிஹைடு எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இந்த ஷாம்புவில் இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
 
சில ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தர ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கடந்த மார்ச் 5ம் தேதி ராஜஸ்தான் மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தனர். அதில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருட்கள் சிலவற்றின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில், ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு பொருட்கள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி பவுடர் மீதும் இதேபோல் சில புகார்கள் வந்தது. இருப்பினும், அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஜான்சன் & ஜான்சன்’ஸ் நிறுவனம் சார்பில் கடந்த பிப்ரவரியில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சை முடிவடைவதற்குள், தற்போது அந்த நிறுவனத்தின் ஷாம்பு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

ஆனால், ராஜஸ்தான் அரசு நடத்திய சோதனை ஏற்புடையதல்ல என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ஜான்சன் & ஜான்சன்’ஸ் தெரிவித்துள்ளது. சோதனை முறையாக நடத்தப்படவில்லை என்று அது தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானது என்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன்’ஸ் பவுடர் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டதாக பெண்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றினை அளித்தது. பாதிக்கப்பட்ட 22 பெண்களுக்கு 32 ஆயிரத்து 545 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க உத்தரவிட்டது.

அப்போது, புகார் அளித்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்செல்ஸை சேர்ந்தா எவா என்ற பெண்ணின் தலைமுடி கொட்டிய நிலையில் இருந்த படமும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.