இந்தியா

மோடி சொன்னபடி ஒரு கோடி பேருக்கு வேலை... கிடைத்ததா?

மோடி சொன்னபடி ஒரு கோடி பேருக்கு வேலை... கிடைத்ததா?

webteam

நரேந்திர மோடியின் ஆட்சி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து, ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அவர் வழங்கிய வாக்குறுதி என்ன ஆனது என்று ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது, தொழிலாளர் பணியகம் (Labour bureau).

நவம்பர் 22, 2013 ஆம் ஆண்டு ஆக்ராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். பாஜகவும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் மோடி அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மோடி அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேலை இழந்ததைத் தடுக்கவும் முடியவில்லை என்கிறது தொழிலாளர் பணியகம்.

இந்த அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த 3 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் சிறிதும் மாறவில்லை என்று 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை மோடி ஆட்சியில் நாடு சந்தித்துள்ளது என்றும், 2015 ஆம் ஆண்டு 1.55 லட்சம் வேலைவாய்ப்புகளும், 2016 ஆம் ஆண்டு 2.31 லட்சம் வேலைவாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோடி சொன்ன ஒரு கோடி வேலைவாய்ப்புக்கும், உண்மையான புள்ளிவிவரத்திற்கு மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. மாறாக 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஜவுளித் தொழில், லெதர், மெட்டல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், ஜெம் & ஜுவல்லரி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு ஆகிய 8 துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காதது மட்டுமல்ல; ஆண்டுதோறும் இந்தத் துறைகளில் உள்ளவர்கள் வேலையிழக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. 2015 ஆம் ஆண்டு 19,000 பேர் ஜெம் & ஜுவல்லரி துறையில் வேலையை இழந்துள்ளனர். 11,000 பேர் நெசவுத் தொழிலில் வேலை இழந்துள்ளனர். லெதர் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் 8000 பேரும், போக்குவரத்து துறையில் 4000 பேரும், ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறையில் 76,000 பேரும், டெக்ஸ்டைல் துறையில் 72,000 பேரும், மெட்டல் தொழிலில் 32,000 பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.