அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் பல்வேறு கட்டங்களாக புனித பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் 5 நாட்களில் 67,228 யாத்திரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த வருடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அமர்நாத் பயணத்திற்காக பதிவு செய்திருந்த நிலையில் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 67 ஆயிரத்து 228 யாத்திரீகர்கள் குகை கோயிலில் வழிபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி முதல் கட்ட அமர்நாத் தரிசன பயணம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.