இந்தியா

ஜார்க்கண்ட்டின் 11 ஆவது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட்டின் 11 ஆவது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

webteam

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், 47 இடங்களில் வெற்றிப் பெற்று பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்எல்ஏ என மேலும் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.

ராஞ்சியின் மொர்ஹாபதி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். ஹேமந்த் சோரனுடன் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் ஆலம்கிர் ஆலம், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ராஜா, தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு ஹேமந்த் சோரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.