ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ல் முடிவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவுசெய்த தேர்தல் ஆணையம், அதற்கான தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளா் சீதா சோரன் கண்ணீர்விட்டு அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் ஹேமந்த சோரனின் அண்ணியான சீதா சோரன், தற்போது பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, அடுத்த முதல்வரை தோ்ந்தெடுப்பது குறித்த பிரச்னை காரணமாக சீதா சோரன் பாஜகவில் இணைந்தாா். அதன்பிற்கு, புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட சம்பாய் சோரனும் பின்னாளில் பாஜகவில் இணைந்தார். இவரும் தற்போது களத்தில் உள்ளார். அதுபோல் ஜாம்தாரா தொகுதியின் பாஜக வேட்பாளராக சீதா சோரன் நிறுத்தப்பட்டுள்ளார். இதே தொகுதியில் முக்தி மோர்ச்சா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான இா்ஃபான் அன்சாரி போட்டியிடுகிறார்.
இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இர்ஃபான் அன்சாரி, சீதா சோரனை அவர் மனம் புண்படும்படி தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கிப் பேசியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் மனமுடைந்து பேசிய சீதா சோரன், ”இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் என்னைப் பற்றி அன்சாரி தொடா்ந்து தவறாகப் பேசி வருகிறாா். சமீபத்தில் அவா் என்னை அவதூறாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒட்டுமொத்த பழங்குடியின பெண்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை பழங்குடியின சமூகத்தினா் ஒருகாலமும் மன்னிக்க மாட்டாா்கள். கணவரை இழந்த என்னை அவா் அவதூறாக பேசியுள்ளாா்” என்றாா்.
அவர் கண்கலங்கியதைக் கண்டு நவாடா தொகுதியின் பாஜக எம்.பி. விவேக் தாக்குா் ஆறுதல் தெரிவித்தாா். அன்சாரிக்கு எதிராக ஜாா்க்கண்ட் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவேக் தாக்குா் தெரிவித்தாா். மறுபுறம், அன்சாரி தெரிவித்த அவதூறு கருத்துகள் குறித்து மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஜாா்க்கண்ட் அரசுக்கு பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.