இந்தியா

விமான விபத்து எதிரொலி: போயிங் ரக விமான சேவைக்கு தற்காலிக தடை

விமான விபத்து எதிரொலி: போயிங் ரக விமான சேவைக்கு தற்காலிக தடை

webteam

எத்தியோப்பியாவில் நடந்த விமா‌ன விபத்தை தொடர்ந்து, போயிங் ரக விமான சேவையை சீனா உள்ளிட்ட நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது. 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்த போது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப்பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய இரு விமானங்களுமே போயிங் ரகத்தை சேர்ந்தவை என்பதால் இந்த விமானம் குறித்து சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதையடுத்து சீனா, எத்தியோப்பியா, கேமேன் தீவுகள் உள்ளிட்ட நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. 

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த விமானங் களின் விவரங்களை, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கேட்க இருக்கிறது.