jcb x page
இந்தியா

உத்தரப்பிரதேசம்| கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்.. ஜேசிபியைக் கொண்டு இடித்துத் தள்ளிய ஓட்டுநர்!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கக் கட்டணம் கேட்டதற்காக, ஜே.சி.பி. டிரைவர் ஒருவர், அந்த வாகனத்தின் மூலம் இரண்டு கட்டணம் வசூலிக்கும் மையங்களைத் தகர்த்ததாகக் கூறப்படுகிறது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹாபூரில் சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுங்கச்சாவடி அருகே, இன்று காலை ஜே.சி.பி. ஒன்று கடக்க முயன்றது. அப்போது, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தும்படி புல்டோசர் டிரைவரிடம் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் திடீரென ஜே.சி.பி. மூலம் சுங்கச்சாவடியைத் தகர்க்கத் தொடங்கினார்.

இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரண்டு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஹாபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜே.சி.பி. டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், இதே சுங்கச்சாவடியில் கார் ஓட்டுநர் ஒருவர், கட்டணத்தைத் தவிர்க்கும் விதமாக, அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் காரைக் கொண்டு மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவுக்குப் பதிலடி|திபெத்தில் 30 இடங்களுக்குப் பெயரை மாற்றும் இந்தியா!