கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை மறுசீரமைக்கும் மசோதா மீதான விவாதத்தில் பேசிய டி.ஆர்.பாலு, வரலாற்றுச் சாதனை படைத்துவிட்டதாக கருதி மகிழ்ச்சியிலும் மற்றவர்களை கிண்டலடிப்பதிலும் மத்திய அரசு ஆழ்ந்திருக்கிறது என விமர்சித்தார். மக்களவைத் தேர்தலில் தமிழகம், கேரளாவில் பாரதிய ஜனதாவால் வெற்றிபெறமுடியவில்லை என்றும் இதற்கான காரணம் குறித்து சிந்தியுங்கள் என்றும் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அதிமுக மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ரவீந்திரநாத்தை அமரச் சொல்லி பேசிய டி.ஆர்.பாலு முழுகெலும்புள்ளவர்களுக்காகவே மக்களவை உள்ளது என்றார். இதற்கு திமுக எம்.பி.க்கள் மற்றும் கேரள எம்பிக்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய ரவீந்திரநாத் குமார், 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும் 1974ல் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரைவார்த்த கட்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கச்சத்தீவை மீட்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாகவும் கச்சத்தீவை திமுக தான் இலங்கைக்கு தாரை வார்த்தது எனவும் தெரிவித்தார்.