கேரளா ராணுவ வீரர் ட்விட்டர்
இந்தியா

கேரளா: PFI தாக்குதல் சம்பவம் போலி.. விசாரணையில் நண்பருடன் சேர்ந்து ராணுவ வீரர் நாடகமாடியது அம்பலம்!

கேரளாவில் ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவம் போலி என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கடந்த 24ஆம் தேதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகவும், மேலும் அவரது கைகளை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், முதுகில் பச்சை நிற மசியினால் பிஎஃப்ஐ (PFI) என எழுதியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக, அமலாக்கத்துறையின் சோதனை கேரளாவில் நடைபெற்ற நாளில், ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் வீடியோ வைரலாகியது. இதுகுறித்து போலீசார் தீவிரமாய் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவம், போலி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்ட கொல்லம் ரூரல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பிரதாபன் நாயர், ”ராணுவ வீரர் அளித்த புகார் போலியானது. நாடு முழுவதும் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர் இந்த செயலை திட்டமிட்டுச் செய்துள்ளார். சம்பவத்தன்று ராணுவ வீரரான ஷைன் குமார், அவருடைய நண்பரான ஜோஷியிடம், ’தன் முதுகில் PFI என பெயிண்டால் எழுது’ எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு ஜோஷி ’ஏன்’ எனக் கேட்க, ’தாம் நாடு முழுவதும் பிரபலமாக வேண்டும்; அதற்காகத்தான் இதைச் செய்யச் சொல்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

அப்போது போதையில் இருந்த ஜோஷி, முதலில் PFI என்பதற்குப் பதிலாக, ’டிஎஃப்ஐ’ என எழுதியுள்ளார். ஆனால் பின்னர் ராணுவ வீரர் வற்புறுத்தியதன் பேரில் அதையே PFI என மாற்றியுள்ளார். அதன்பிறகு, ஷைன் குமார் ஜோஷியிடம் தன்னை அடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் போதையில் இருந்ததால் மறுத்துள்ளார். இதையடுத்து, தன் வாய் மற்றும் கைகளையாவது கட்டு என வற்புறுத்தியுள்ளார். இதனால்தான் ஜோஷி, அவருடைய கைகளையும் வாயையும் கட்டியுள்ளார். அதன்பிறகே இந்த நாடகத்தை ராணுவ வீரர் அரங்கேற்றியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரரின் போலி தாக்குலுக்குப் பயன்படுத்தப்பட்ட பச்சை பெயிண்ட், பிரஷ் மற்றும் டேப் உள்ளிட்டவற்றை நண்பரின் வீட்டில் இருந்து கொல்லம் போலீசார் மீட்டுள்ளனர்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை உத்தரவு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்தது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பில் இருந்ததாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக நிதி சேகரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டை தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை விசாரித்தன. மேலும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் விசாரணைகளே கேரளத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.