இந்தியா

”இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது ஜப்பான்” - பிரதமர் மோடி

”இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது ஜப்பான்” - பிரதமர் மோடி

webteam

இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தியா வந்துள்ளார். மோடி மற்றும் கிஷிடா ஆகிய இரு தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் மாநாடு இது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இருதரப்பு ஒத்துழைப்பை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தும் வகையில் ஆறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதிவேக ரயில்வேக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் இன்று இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் ரூ.3.2 லட்சம் கோடி(42 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உள்ளது” என்று அறிவித்தார்.

மேலும் அவர் “முன்னேற்றம், செழுமை, கூட்டாண்மை ஆகியவை இந்தியா - ஜப்பான் உறவுகளின் அடிப்படை ஆகும். பொருளாதாரம் வளர்ச்சி அடைய நம்பகமான, நிலையான எரிசக்தி விநியோகம் ஒரு நாட்டிற்கு அவசியம். இந்தியா-ஜப்பான் உறவுகளை ஆழப்படுத்துவது இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்க உதவும்” என்று கூறினார்.