குடியுரிமை சட்ட திருத்தத்தின் காரணமாக அசாமில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இந்தியா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்டு, குடியுரிமை சட்டதிருத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன.
அதனடிப்படையில் அசாம், திரிபுரா, மேகலயா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தின் காரணமாக அசாமில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இந்தியா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ‘ஊடகங்களிடம் தெரிவிப்பதற்கு எந்த தகவலும் இல்லை’ என்று தெரிவித்தார். முன்னதாக, அசாம் மாநிலம் கவுகாத்தியில் டிசம்பர் 15-17-ம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகை தருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.