இந்தியா

பகத் சிங் தீவிரவாதியா? - சர்ச்சையை கிளப்பிய ஜம்மு பேராசிரியர்

பகத் சிங் தீவிரவாதியா? - சர்ச்சையை கிளப்பிய ஜம்மு பேராசிரியர்

rajakannan

விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கை ஒரு தீவிரவாதி எனக் கூறியதாக ஜம்மு பல்கலைக் கழக பேராசிரியர் மீது மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். 

ஜம்மு பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் இந்த விவகாரம் தொடர்பாக 25 நொடிகள் கொண்ட ஒரு வீடியோ கிளிப்பை ஆதாரத்துடன் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரத்தை பல்கலைக் கழக துணை வேந்தர் வரை மாணவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

ஜம்மு பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் மனோஜ் கே தார் ஏஎன்ஐ-யிடம் கூறுகையில், “சில மாணவர்கள் நேற்று (வியாழன்) என்னிடம் வந்து இந்த விவகாரம் குறித்து தெரிவித்தார்கள். சிடி ஒன்றினையும் ஆதாரமாக கொடுத்தார்கள். உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்தேன். அதன் அறிக்கை வரும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் தாஜூதீன் கூறுகையில், “ரஷ்ய புரட்சியாளர் லெனின் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அதில், அரசு தனக்கு எதிராக வன்முறையை தீவிரவாதம் என்றழைக்கிறது எனக் கூறினேன். சிலர் நான் 2 மணி நேரம் நடத்திய பாடத்தில் வெறும் 25 நொடிகள் மட்டும் எடுத்துள்ளார்கள். தீவிரவாதம் என்ற வார்த்தை அப்படி தான் வந்தது. மற்றபடி வேறு எந்த அர்த்தத்திலும் கூறவில்லை. இருப்பினும், யாருடைய மனதையும் புன்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொழுதும், பகத் சிங் ஒரு புரட்சியாளர் என்பதுதான் என்னுடைய கருத்தும். நாட்டிற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர்களில் அவரும் ஒருவர்” என்று விளக்கம் அளித்தார்.