ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் தனது புகைப்படம் இருப்பது கண்டு உயிருடன் இருக்கும் நபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரிலன் சந்தர்கிர் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விமானப் படையின் கமாண்டோ வீரர் வீரமரணமடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்து நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் என ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் தனது படமும் இருந்ததாக அப்துல் மஜித் என்பவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், “தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலில் எனது புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன். எனது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் தீவிரவாதி அல்ல. எனது படத்தை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள். ஊடகங்கள் மற்றும் அரசின் அலட்சியத்தையே இது காட்டுகிறது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதில் யாருடைய சதி உள்ளது என்று தெரியவில்லை. இந்த தவறை, குழப்பத்தை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.