ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் படைத்தளத்தில் உள்ள விமானப்படை விங் கமாண்டர் மீது, அங்கு பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் புத்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், ”விங் கமாண்டர், எனக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பாலியல் தொல்லை தந்தார். அதுமுதல், நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகிறேன். இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் புகார் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகார் தொடர்பாக சட்டப்பிரிவு 376(2)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட விங் கமாண்டர் கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ”விமானப்படை நிலையத்தில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் கைது செய்யப்பட்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். இதன் காரணமாகவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.