ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முகநூல்
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

PT WEB

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்

மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களில் ராணுவம், சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ- திபெத்திய எல்லை காவல்துறை உள்ளிட்டவை காஷ்மீர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எல்லைகளிலும் தீவிரவாத ஊடுருவல் முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

415 பேர் போட்டியிடும் இறுதி கட்ட தேர்தலுக்காக, 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 38,18,000 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட தேர்தல் என்பதால், முன்னதாக 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 61.38 சதவீத வாக்குகளும், 26 தொகுதிகளில் நடைபெற்ற 2 ஆம் கட்டத் தேர்தலில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இத்துடன் கடைசி கட்டத்தில் பதியப்படும் வாக்குகளையும் சேர்த்து 90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.