இந்தியா

ஜம்மு: புதுவித தாக்குதல் முறையால் அதிகரிக்கும் அச்சம்

ஜம்மு: புதுவித தாக்குதல் முறையால் அதிகரிக்கும் அச்சம்

Sinekadhara

காஷ்மீர் வான்வெளிகளில் ட்ரோன்கள் அதிகளவு பறக்கத் தொடங்கியுள்ளது பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் வான் பரப்பில் ட்ரோன்கள் பறப்பது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 முறை ட்ரோன்கள் பறந்துள்ளன. இந்த புதுவித பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தயாராகும் இந்த ட்ரோன்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெற்று பயன்படுத்துவதாக இந்திய உளவுப்படையினர் உறுதி செய்துள்ளனர். ட்ரோன்களை பயன்படுத்தி ஆயுதக் கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல் அதிகளவில் நடந்து வந்த நிலையில் தற்போது வெடிகுண்டு தாக்குதலே நடந்துவிட்டது. இத்தகைய ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் நிலையில் அவற்றை வானிலேயே ஜாமர் கருவிகள் மூலம் செயலிழக்கச் செய்யும் முயற்சியை பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள உள்ளனர். மேலும் ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தும் கருவிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிபிஎஸ் வரைபடங்கள் இத்தகைய ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கு இன்றியமையாதவை என்பதால் ஒருவேளை காஷ்மீர் பகுதியில் இயங்கும் தீவிரவாதிகள் இத்தகைய தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார்களா? என்பதும் தற்போது உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.