இந்தியா

காஷ்மீர் வாக்காளர்கள் கண்களில் நம்பிக்கையைக் கண்டேன்: பிரதமர் மோடி

webteam

மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதாக பாராட்டிய பிரதமர் மோடி, "காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு தெரிந்தது. அவர்களின் கண்களில் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நான் கண்டேன்" என்றார்.

ஜம்மு - காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தைக் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இங்கு தற்போது சுமார் 6 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. செஹத் திட்டத்திற்குப் பிறகு அனைத்து 21 லட்சம் குடும்பங்களும் அதே பயனை அடையும். இந்தத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக ஜம்மு - காஷ்மீரின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளிலிருந்தும் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆயுஷ்மான் திட்டத்தின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. மக்களின் வளர்ச்சிக்காக ஜம்மு-காஷ்மீர் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் வளர்ச்சி, அரசின் மிகப் பெரும் முன்னுரிமைகளுள் ஒன்று.

ஜனநாயகத்தை வலுப்படுத்தி வருவதற்காக ஜம்மு - காஷ்மீர் மக்களைப் பாராட்டுகிறேன். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருக்கிறது. கடும் குளிரையும், கொரோனாவையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் பாராட்டுக்குரியவர்கள். ஜம்மு - காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு தெரிந்தது. ஜம்மு - காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் கண்களிலும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நான் கண்டேன்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற இந்தத் தேர்தல்கள் நாட்டின் ஜனநாயகத்தின் பலத்தையும் காட்டின. உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள போதும், புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லையே ஏன்?" என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசும்போது, "ஜம்மு - காஷ்மீரின் இளைஞர்கள் சுலபமாகக் கடன் பெற்று அமைதியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஜம்மு - காஷ்மீரில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் இருப்பிடச் சான்றிதழை தற்போது பெற்று வருகின்றனர். பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களும், மலைவாழ் மக்களும், எல்லைப்பகுதியில் வசிப்பவர்களும் இடஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்" என்றார் பிரதமர் மோடி.