இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு, பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததுடன், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, சமீபத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீரில் புதியதாக பதவியேற்ற தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி சட்டப்பிரிவு 370-யை மீட்டெடுப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தது.
துணை முதல்வர் சுரிந்தர் குமார் சௌத்ரி இந்த தீர்மானத்தை கோரினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அவையில் பெரும் அமளி நிலவியது. அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தீர்மான நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக உறுப்பினர்களை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சியினர் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.