யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு ஐம்மு காஷ்மீரில் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 24 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்முவில் 11 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் 15 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. 26 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவுக்காக 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா போட்டியிடும் கந்தர்பால் மற்றும் புட்காம் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தாரிக் ஹமீத் கார்ரா மத்திய ஷெல்டாங் தொகுதியிலும், பாஜக மாநிலத் தலைவர் ரவிந்தர் ரெய்னா நவ்ஷேரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெற்று வரும் பகுதிகளில், ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.