ஜெய்ப்பூர்  எக்ஸ் தளம்
இந்தியா

‘இவர் ரூ.150-க்கு கிடைப்பார்’ - வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு விலை வைத்து வீடியோ! இளைஞர் கைது

Prakash J

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள அமீர் கோட்டை சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தக் கோட்டைக்கு வரும் பயணிகள், அருகில் உள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் கலைப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தன்னை சுற்றுலா வழிகாட்டி என கூறியபடி, வெளிநாட்டுச் சுற்றுலா பெண் பயணிகள் சிலரை, அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கும்படி செய்திருக்கிறார். அப்படியே அவர்களை வீடியோவும் எடுத்துள்ளார். அப்போது, அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: T20 WC|தொடர் தோல்வி.. வெளியேறிய பாகிஸ்தான்.. PCB விசாரணையில் வெளியான புது தகவல்!

அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, அவர்களுக்கு விலை வைத்தப்படி கூறுகிறார். அதாவது, பொருட்களுக்கு விலையைக் குறிப்பிடும் நோக்கில், 'இவர் ரூ.150-க்கு கிடைப்பார். இவருக்கு விலை ரூ.200. இவரை ரூ.500 தந்து பெற்று கொள்ளலாம். இது ரூ.300-க்கு கிடைக்கும்' என அந்தப் பெண்களுக்கு விலை வைத்து குறிப்பிடுகிறார். ஆனால், அவர் இந்தியில் என்ன கூறுகிறார் என அறியாமல், அந்த வெளிநாட்டுப் பெண்களும் கேமரா முன் புன்னகைத்தபடி தலையாட்டுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், அதன் உண்மைத்தன்மையைப் புரிந்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, போலீசாரும் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை கட்டாயப்படுத்தி, தன்னுடைய கடையில் பொருட்களை வாங்க செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளை வைத்து இதுபோன்ற மோசமான வீடியோவை பதிவிட்டால் எப்படி திரும்பவும் அவர்கள் வருவார்கள். அதேபோல் மற்றவர்களும் இதை பார்த்தால் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று தோன்றாது. இது மோசமான அனுபவம் தானே அந்தப் பயணிகளுக்கும்.

இதையும் படிக்க: சைவ உணவில் எலும்பு.. பிரியாணியில் புழு.. ஸ்விக்கி மீது அடுத்தடுத்து குற்றஞ்சாட்டிய பயனர்கள்.. #Photo