திருமணம் என்றால் இப்பொழுதெல்லாம், மணப்பெண் கைகளில் மெஹந்தி இடும் வைபவம் முதல், சங்கீத், ரிஷப்ஷன், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்று அனைத்து திருமண சடங்குகளையும் ஒன்றுவிடாமல் வீடியோ, ஃபோட்டோஷுட் எடுத்துவிடுகின்றனர். இதுபோக திருமணத்துக்கும் முந்தைய மற்றும் பிந்தைய ஃபோட்டோஷூட் வேறு...
இதையெல்லாம் யூடியூப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் சம்பாதிக்கிறது திருமணக்குழு. இதில் சில புகைப்படக்காரர்கள் தங்களின் புகைப்படமானது தனிப்பட்ட புகைப்படமாக இருக்கவேண்டும்; அதை ஊரே மெச்சவேண்டும் என்று நினைத்து, புதுமண தம்பதிகளை பலவிதத்தில் புது புது ஐடியாக்களை கொண்டு ஃபோட்டோஷூட் செய்து வருகின்றனர்.
தம்பதியர்களை படகில் நிற்கவைத்து, பீச்சில் நிற்கவைத்து மழையில் நனையவைத்து... என்று ஒரு குறும்படம் எடுப்பது போல எடுக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக க்ரியேட்டிவிட்டி என்ற பெயரில் எல்லை மீறி ஆபத்தான சில விஷயங்களையும் செய்கிறார்கள் அவர்கள்.
அப்படித்தான், ஜெய்ப்பூரில் ரயில்வே பாலத்தில் ஆபத்தை உணராமல் புதுமணத் தம்பதியை ஃபோட்டோஷூட் செய்துள்ளது ஒரு குழு. இதில் நடந்த விபரீதம், வீடியோவாக தற்பொழுது வைரலாகி வருகிறது.
ஜெய்பூர் ஹரிமாலியைச் சேர்ந்தவர்கள் ராகுல் மேவாடா (22) மற்றும் ஜான்வி (20). இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புதுமண ஜோடியை ஃபோட்டோஷூட் எடுப்பதற்காக, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் ஜெய்பூருக்கு அருகில் இருக்கும் ஜோக்மண்டி ரயில்வே பாலத்தில் புதுமண ஜோடியை நிற்க வைத்துள்ளனர்.
அப்பொழுது அந்த பாலத்தில் பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்சியடைந்த புதுமணத் தம்பதிகள் ஒதுங்கிக்கொள்ள பாலத்தில் இடமில்லாததால், வேறுவழியின்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 90 அடி உயரத்திலிருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவர்களையும் மீட்ட நண்பர்கள், உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதில் ராகுல் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும், ஜான்வி பாலியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.